amutha malai polikirathu

திங்கள், 16 ஏப்ரல், 2012

எட்டிப் பார்க்கும் வெள்ளை முடியை கறுப்பு மை பூசி மறைத்து வைப்பது ஆண்களின் வழக்கம். எப்போது வயதைக் கேட்டாலும் நான்கைந்து குறைத்தே சொல்வது பெண்களின் பழக்கம். இந்த வழக்கத்துக்கும் பழக்கத்துக்கும் ஒரே காரணம், ‘இளமை’ மனப்பான்மை. அது சரி… என்றும் இளமையாகவே இருக்க முடியுமா?

‘யார் தடுத்தாலும் நில்லாமல் முன்னேறிச் செல்லும் ஜல்லிக்கட்டுக் காளைதான் வயசு. ஆனால், உணவுப் பழக்கம் என்கிற மூக்கணாங்கயிறு கொண்டு


ஓரளவு உடலைக் கட்டுக்குலையாமல் வைக்கலாம்’ என்கிறார்கள் உணவு நிபுணர்கள். ‘நேஷனல் இன்ஸ்ட்யூட் ஆஃப் நியூட்ரிஷன்’ அளவீடுகளை

மேற்கோள் காட்டி, இளமையை இழுத்துப் பிடிக்க 20 வழிகளைப் பட்டியலிடுகிறார், சென்னை பிங்க் ஃபிட்னஸ் ஸ்டூடியோ ஊட்டச்சத்து நிபுணர்

ரிஸ்மியா முகைதீன்.

1. மூன்று வேளை சாப்பாடு என்பதே பொதுவான நடைமுறை. இந்த 3 உணவுவேளைகளுக்கு இடையிலும் ஏதாவது சாப்பிட வேண்டும். சுண்டல்,

ஓட்ஸ், சாலட், ஜூஸ், மோர்… இப்படி! குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிடுவதால் உடலின் வளர்சிதைமாற்றம் நல்லபடி நிகழும். ஆரோக்கியம்

மேம்பட இது அவசியம்.

2. காலை உணவை திருப்தியாகச் சாப்பிடலாம். மதியம் வயிறு முட்டச் சாப்பிட்டால் தேவையற்ற தூக்கம் வரும். இரவில் அதிகம் சாப்பிட்டாலோ

தூக்கம் பாதிக்கப்படும். ஆண்களுக்கு தினம் 2425 கலோரியும் பெண்களுக்கு 1875 கலோரியும் அனுமதிக்கப்பட்ட அளவு.

3. கார்போஹைட்ரேட் (50%), புரதம் (30%), கொழுப்பு (15%), வைட்டமின்கள், தாது உப்புகள் (5%)  இவையெல்லாம் அடங்கிய உணவே சரிவிகித

உணவு. நமது டயட்டில் இவை அனைத்தும் இருக்க வேண்டும்.

4. ஒருமுறை உணவை விழுங்க 15 முறை மெல்ல வேண்டும். நாம் பொதுவாக அதிகபட்சம் 7 முறையே மெல்லுகிறோம்.

5. வாரம் ஒருமுறையாவது கீரை அவசியம். கீரையின் நார்ச்சத்துகள் கொழுப்பைக் கரைக்கின்றன.

6. உடலின் இறந்த செல்களை நீக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த காய் கனிகளை நிறைய சாப்பிட வேண்டும்.

7. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் தேன் கலந்து சாப்பிடலாம். உடல் உஷ்ணமாக இருப்பவர்கள் ஊற வைத்த வெந்தயத்தை மென்று

தண்ணீர் குடிக்கலாம்.

8. தினமும் கைப்பிடியளவு பாதாம் அல்லது வேர்க்கடலை சாப்பிட வேண்டும். ‘பாதாம் நிறைய சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கூடும்’ என்பது தவறான

கருத்து. தினம் ஒரு பேரீச்சை சாப்பிடலாம்.

9. மூன்று பேர் கொண்ட குடும்பத்துக்கு மாதம் ஒன்றரை லிட்டர் சமையல் எண்ணெய் போதும். நல்லெண்ணெய், கடலை எண்ணெய் என மாற்றி

மாற்றி உபயோகிக்கலாம்.

10. பாமாயில், வனஸ்பதி, நெய் போன்றவற்றைத் தவிர்ப்பது சிறந்தது. கொழுப்பு கூடுகிறது இவற்றால்.

11. தவிர்க்கமுடியாவிட்டால், வாரம் இரண்டு நாள்கள் சிக்கன் எடுக்கலாம். எண்ணெயில் வறுப்பதைத் தவிர்த்து, குழம்பில் சேர்த்துச் சாப்பிடுவதே

பெஸ்ட். இரவில் அசைவம் வேண்டாம்.

12. மட்டன், பீஃப் வேண்டுமென்றால் மாதத்தில் ஒரு நாள் எடுத்துக் கொள்ளலாம்.

13. சராசரி மனிதன் ஒருநாளைக்குக் குடிக்க வேண்டிய தண்ணீர் இரண்டரை லிட்டர்.

14. சிறிய பங்களிப்புதான் என்றாலும் உப்பும் சர்க்கரையும் தேடாத நாக்கே இருக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒரு டீ ஸ்பூன் உப்பு மற்றும் 2 முதல்

3 டீஸ்பூன் சர்க்கரை என்பது ஆரோக்கிய அளவு.

15. பேக் செய்யப்பட்ட உணவுப்பொருட்களைத் தவிர்க்கலாம். அவை கெட்டுப்போகாமலிருக்க எண்ணெயும் உப்பும் அதிகம் சேர்த்திருப்பார்கள்.

16. தினமும் 2 கப் காபி பருகலாம். கிரீன் டீ குடிப்பது உடலுக்கு நல்லது.

17. இரவில் படுக்கப்போகும் முன் சர்க்கரை சேர்க்காமல் ஒரு டம்ளர் பால் அருந்தலாம்.

18. கொலஸ்ட்ராலைக் குறைத்து இதய நோயைத் தடுக்கும் ‘ஒமேகா 3 ஃபேட்டி அமிலம்’ மீன்களில் அதிகமுள்ளது. வாரம் இருமுறை சேர்க்கலாம்.

19. குளிர்பானங்களை ஒதுக்குவது நல்லது. பழச்சாற்றில் அதிகம் தண்ணீர் சேர்த்துக் குடிக்கலாம்.

20. உணவுப் பழக்கங்களால் வாயைக் கட்டிப் போட்டு வைத்தாலும், உடற்பயிற்சி மிகமிக முக்கியம். தினமும் ஒருமணி நேரமாவது அவசியம்.


0 comments :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்